₹ 29 லட்சம் பணம் வாங்கி மோசடி பிரபல கவர்ச்சி நடிகையிடம் போலீசார் விசாரணை

₹ 29 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கொச்சி போலீசார் நடிகை சன்னி லியோனிடம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறி இவர் பணம் வாங்கி ஏமாற்றியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். ஏராளமான கவர்ச்சிப் படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த மதுர ராஜா என்ற படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடினார். இதனால் கேரளாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், சுற்றுலாவுக்காகவும் சன்னி லியோன் கடந்த சில வாரங்களுக்கு முன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேரளா வந்திருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு வாரம் தனிமையில் இருந்த பின்னர் இவர், கொச்சி, கோட்டயம், ஆலப்புழா உட்பட இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

இந்நிலையில் இவர் மீது கூறப்பட்ட பண மோசடி புகார் தொடர்பாக கொச்சி குற்றப்பிரிவு போலீசார் சன்னி லியோனிடம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஷியாஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கூறியிருந்தது: கொச்சியில் ஒரு துணிக்கடை திறப்பு விழாவுக்காக வருவதாக கூறி நடிகை சன்னி லியோன் என்னிடமிருந்து 29 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் அவர் கூறியபடி அவர் திறப்பு விழாவுக்கு வரவில்லை. பணத்தை வாங்கி ஏமாற்றிய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கொச்சி குற்றப்பிரிவு போலீசுக்கு கேரள டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகை சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. சிறிது நேர விசாரணைக்குப் பின் அவரை போலீசார் விடுவித்தனர்.

More News >>