மத்திய அரசுக்கு ஆதரவு டெண்டுல்கர் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி திடீர் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி கொச்சியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல சர்வதேச தலைவர்களும், சர்வதேச பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாப் பாடகி ரிஹானா மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா டியூன்பெர்க் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்தார். இந்தியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல வேண்டாம் என்று அவர் தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.டெண்டுல்கரின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்த போதிலும் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் டெண்டுல்கரை கண்டித்து கேரளாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். கொச்சியில் டெண்டுல்கரின் கட் அவுட்டில் இளைஞர் காங்கிரசார் கழிவு ஆயிலை ஊற்றி போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த கட் அவுட்டுடன் அவர்கள் சாலைகளில் கண்டன ஊர்வலமும் நடத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக டெண்டுல்கருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் நல்ல பெயரும், மரியாதையும் உள்ளது. இந்நிலையில் அவருக்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

More News >>