ஐபிஎல்லில் விளையாட போட்டி போடும் வீரர்கள் ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?
பண மழை கொட்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஒருபுறம் பெரும்பாலான சர்வதேச வீரர்கள் போட்டி போடும் போது இன்னொரு புறம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உள்பட ஒரு சில வீரர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.உலகிலேயே சிறந்த கிரிக்கெட் லீக் போட்டியாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி கருதப்பட்டு வருகிறது. பண மழை கொட்டும் இதில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச வீரர்கள் கடும் போட்டி போட்டு வருகின்றனர். ஐபிஎல்லின் தொடக்கக் கட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பின்னர் ஏற்பட்ட பிரச்சினையால் பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல்லில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பின்னர் பாகிஸ்தான் வீரர்களால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போதும் ஐபிஎல்லில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் பெரும் ஆவலாக உள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட முடியாதது பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரும் இழப்பு என்று சோயப் அக்தர் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்த பல வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பின்னர் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் உள்பட பல நாடுகளும் லீக் போட்டிகளை தொடங்கின. வழக்கமாக இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக போட்டி தள்ளி வைக்கப்பட்டது.இந்தியாவில் போட்டிகளை நடத்த முடியாத நிலை இருந்ததால் கடந்த வருடம் இறுதியில் துபாயில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வருடம் வழக்கம்போல இந்தியாவிலேயே போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் வீரர்கள் முதற்கட்ட ஏலம் சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 1097 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 283 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.இவர்களில் மேற்கிந்திய வீரர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். மிக அதிகமாக 56 பேர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் உள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 42 வீரர்களும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 38 வீரர்களும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.இந்த ஆண்டின் சீசனுக்கான ஏலத்தில் 11 வீரர்கள் அதிகபட்ச தொடக்க விலையான ₹ 2 கோடி பட்டியலில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், தென்னாபிரிக்காவின் காலின் இங்க்ரம், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், லியம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் வுட், மொயின் அலி மற்றும் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். உலகின் நம்பர் ஒன் டி 20 பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலன் இந்த சீசனில் களமிறங்க தீர்மானித்துள்ளார். அவருக்கு ஆரம்ப விலையாக ₹ 1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவரை வாங்குவதற்கு அணிகள் கடும் போட்டி போடும் என கருதப்படுகிறது. இதே போல தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக்கில் விளையாடி விக்கெட்டுகளை குவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனுக்கும் இந்த ஆண்டு கடும் போட்டி இருக்கும் என கருதலாம்.
இதேபோல டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேனுக்கும் இந்த ஆண்டு போட்டி கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. பிக் பாஷில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிரடியாக விளையாடியது தான் இதற்கு காரணமாகும். இவருக்கு ஆரம்ப விலை ₹ 1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் 7 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தும் இந்த முறை ஐபிஎல்லில் பதிவு செய்துள்ளார். இது தவிர இன்னொரு முக்கிய அம்சமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இம்முறை பதிவு செய்துள்ளார். இவருக்கு ஆரம்ப விலையாக 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது லக்கன்வால் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார். இவரின் வயது 16 மட்டுமே. இவர் தான் இந்த ஐபிஎல்லில் பங்கேற்கப் போகும் மிக இளம் வயது வீரர் ஆவார்.இந்நிலையில் ஐபிஎல்லில் விளையாட பெரும்பாலான சர்வதேச வீரர்களும் போட்டி போடும் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் உள்பட ஒரு சிலர் இதை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மிட்செல் ஸ்டார்க் 2015 வரை போட்டியில் கலந்து கொண்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர், கடைசியாக ஆடிய சீசனில் மட்டும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளை ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
பணத்தை விட தேசிய அணிக்காக விளையாடுவதை இவர் அதிகமாக விரும்புவது தான் இதற்கு முக்கிய காரணமாகும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் போட்டியில் அவர் இருக்கின்ற போதிலும் பெரும்பாலான போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. இவரைப் போலவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டும் தற்போது ஐபிஎல்லை புறக்கணித்து வருகிறார். கடந்த இரு வருடங்களாக ஐபிஎல் ஏலத்திற்காக பெயரை பதிவு செய்யவில்லை.மிட்செல் ஸ்டார்க்கைப் போலவே இவரும் தேசிய அணியில் விளையாடுவதற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டிலும் இவர் விளையாடி வருகிறார். இவை இரண்டும் தான் ஐபிஎல்லை ஜோ ரூட் புறக்கணிக்க முக்கிய காரணமாகும்.
மேலும் டெஸ்ட் வீரரான தன்னை வாங்குவதில் எந்த அணியும் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இவர் கருதுகிறார். ஜோ ரூட் மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் இன்னொரு அதிரடி டி 20 பேட்ஸ்மேனான டாம் பான்ட்டனும் இந்த ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் இவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட தீர்மானித்துள்ளார்.