வெப்சீரிஸ் நடிகர் ஸ்ரீவத்சவ் தற்கொலை... காரணம் என்ன?
ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் சென்னை பெரம்பூர் கரார். சினிமாவில் நடிகராகி புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான தீவிர முயற்சியில் இருந்து வந்தார். சின்னச்சின்ன விளம்பரப் படங்களில் நடித்து அதன்மூலம் திரையுலகில் கால்பதித்தார். எனை நோக்கிப் பாயும் தோட்டா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். சினிமாவில் இருந்தபடியே வெப் சீரிஸ்களுக்குள்ளும் எட்டிப் பார்த்தார்.விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பாகி வரும் யூ-டியூப் தொடரான 'வல்லமை தாராயோ' என்ற சீரியலில் லோகேஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீவத்சவ்.
கடந்த புதன் கிழமை ஷூட்டிங் இருப்பதாகச் சொல்லி வீட்டை விட்டு சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது . ஷூட்டிங்கில் கலந்து கொண்டால் அவர் போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுவார் என்பதால் கொஞ்சம் அசால்டாகவே இருந்திருக்கிறார்கள் குடும்பத்தினர்.
அதன்பிறகு விசாரித்ததில் தான் புதன்கிழமை ஷூட்டிங்கே இல்லை என்பது தெரியவந்தது. ஷூட்டிங் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன ஸ்ரீவத்சவ் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் உள்ள தனது மற்றொரு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அந்த வீடு ஸ்ரீவத்சவின் தந்தை பிசினஸுக்காகப் பயன்படுத்தி வந்த வீடு என்கிறார்கள். அந்த வீட்டில்தான் ஸ்ரீவத்சவ் அடிக்கடி தனியாக இருப்பார் என்கிறார்கள். புதன்கிழமை அந்த வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மறுநாள்தான் தெரியவந்தது.
ஸ்ரீவத்சவின் உடல் மீட்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்குப் பின் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீவத்சவ் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருக்கு நெருக்கமாக இருந்த சிலர் சொல்கிறார்கள். இல்லாதது ஒன்று இருப்பதுபோலத் தோன்றும் 'Hallucination என்ற ஒருவித மன வியாதி அவருக்கு இருந்ததாகத் தெரிகிறது.இத்தனைக்கும் ஸ்ரீவத்சவின் தாயார் பிரபலமான ஒரு மனநல மருத்துவராம்.