100வது டெஸ்டில் இரட்டை சதம் அடிக்கும் முதல் வீரர் சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்
தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு உலகிலேயே இந்த சாதனை படைக்கும் முதல் வீரர் என்ற பெருமை கிடைத்துள்ளது. இது தவிர இன்றைய போட்டியில் மேலும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தற்போது உச்சகட்ட ஃபார்மில் உள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு இவரது சிறப்பான ஆட்டம் தான் முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் 228 ரன்களும், 2வது போட்டியில் 186 ரன்களும் குவித்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஜோ ரூட்டின் சாதனை தொடர்கிறது. சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளே அவர் சதமடித்தார். இதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 2வது நாளான இன்றும் தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். முன்னதாக அவர் 150 ரன்கள் எடுத்திருந்த போது தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களை கடக்கும் 2வது கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களை கடந்த 7வது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதற்கு முன் டோம் லாதன், சங்ககாரா, முடாசர் நாசர், ஜாகீர் அப்பாஸ், டான் பிராட்மேன் மற்றும் வாலி ஹமோண்ட் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இதில் சங்ககாரா தொடர்ந்து 4 முறை சதமடித்தார். இந்நிலையில் இன்று இரட்டை சதம் அடித்ததன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கும் ஒரே கேப்டன் மற்றும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு யாருமே இந்த சாதனையை கிரிக்கெட்டில் படைத்ததில்லை. இது ஜோ ரூட்டின் கிரிக்கெட் வரலாற்றில் 5வது இரட்டை சதமாகும்.
இது மட்டுமில்லாமல் 100வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கும் முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தான் கேப்டனாக இருந்த இன்சமாம் உல் ஹக் தான் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 184 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை ஜோ ரூட் தற்போது முறியடித்துள்ளார். இறுதியில் 218 ரன்கள் எடுத்திருந்த போது இளம் வீரர் ஷஹ்பாஸ் நதீமின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அவருக்கு இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.