நான் பணம் வாங்கி ஏமாற்றவில்லை போலீசில் பிரபல கவர்ச்சி நடிகை வாக்குமூலம்
நான் பணம் வாங்கி யாரையும் ஏமாற்றவில்லை என்றும், விழா ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சி நடத்தாதது தான் வராமல் இருந்ததற்குக் காரணம் என்றும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் போலீசில் தெரிவித்துள்ளார்.பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் கடைகள் மற்றும் நிறுவனங்களின் திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் சன்னி லியோன் அடிக்கடி கேரளாவுக்கு வருவது உண்டு. கடந்த வருடம் இவர் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த மதுர ராஜா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.
இதன் பின்னர் சன்னி லியோனுக்கு கேரளாவில் ரசிகர்கள் பட்டாளம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக இவர் கேரளாவில் ஒரு பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் பெரும்பாவூர் என்ற இடத்தை சேர்ந்த ஷியாஸ் என்பவர் சன்னி லியோனுக்கு எதிராகப் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.அதில், கொச்சியில் ஒரு ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டு நடிகை சன்னி லியோன் 29 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், ஆனால் அவர் கூறியபடி திறப்பு விழாவுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். பணம் வாங்கி மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷியாஸ் தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சன்னி லியோனிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். இந்நிலையில் அவர் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் குடும்பத்துடன் கேரளா வந்திருந்தார். கேரளா வந்த அவரிடம் போலீசார் பண மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.அப்போது, தான் பணம் வாங்கி யாரையும் ஏமாற்றவில்லை என்று போலீசாரிடம் அவர் தெரிவித்தார். பணம் வாங்கியது உண்மை தான் என்றும், ஆனால் 5 முறை நிகழ்ச்சிக்காகத் தேதி கொடுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனால் தான் திறப்பு விழாவுக்குச் செல்லவில்லை என்றும் அவர் கூறினார். எப்போது அழைத்தாலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் சன்னி லியோன் போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். பண மோசடி விவகாரம் தொடர்பாகக் கேரளாவில் நடிகை சன்னி லியோனிடம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.