ஐபிஎல் 2021 ஏலம்: சச்சின் டெண்டுல்கர் மகனை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கும் மும்பை அணி?!
முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் பிப்ரவரி 18-ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னையில் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் மொத்தமாக 57 வீரர்களை விடுவித்துள்ளது. இதனால், நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2021 ஏலத்திற்கு 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 283 வெளிநாட்டு வீரர்களில் அதிகப்பட்சமாக மேற்கிந்திய தீவுகளில் இருந்து 56 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். குறைந்த பட்சமாக நெதர்லாந்தில் இருந்து ஒரு வீரர் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், 2021 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க இந்திய கிர்க்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2020 ஐபிஎல் தொடரின் போதும் ஐக்கிய அமீரத்திற்கு மும்பை இண்டியன்ஸ் அணியுடன் அர்ஜூன் டெண்டுல்கர் சென்றிருந்தார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அர்ஜூன் டெண்டுல்கரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.