விவசாயிகள் போராட்டமா? நோ கமெண்ட்ஸ் நடிகர் மோகன்லால்

விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல மலையாள நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்டபோது 'நோ கமென்ட்ஸ்' என்று கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை முடிவு கொண்டு வர வேண்டுமென்று பல நாட்டுத் தலைவர்களும், பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரபல பாப் பாடகி ரிஹானா, சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா டியூன்பெர்க் உட்பட பிரபலங்கள் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தனர். இவர்களது இந்த கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லி உள்பட கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவில் நடைபெறும் விஷயங்களுக்கு வெளிநாட்டை சேர்ந்த யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று இவர்கள் கூறினர். ஆனால் இவர்களது இந்த கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. இவ்வளவு நாள் டெண்டுல்கர் எங்கே போனார் என்று சிலர் கிண்டலடிக்கவும் செய்தனர்.

இந்நிலையில் கொச்சியில் மலையாள நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவிற்கு பின்னர் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருவதால் போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு 'நோ கமெண்ட்ஸ்' என்று அவர் கூறினார். இப்போது அதற்கான சமயம் அல்ல என்றும் அவர் கூறினார். ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>