போக்குவரத்துக்கு இடையூறு செய்த திருமண வீட்டினர் தட்டிக் கேட்ட வாலிபர் அடித்துக் கொலை
போக்குவரத்துக்கு இடையூறு செய்த திருமண வீட்டினரை தட்டிக் கேட்ட வாலிபர் அடித்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மணமகனின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே நடந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள மாவேலிக்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் நெல்சன். இவரது மகனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இதையொட்டி 200க்கும் மேற்பட்டோர் நெல்சனின் வீட்டுக்கு வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலோனோர் வீட்டின் முன் உள்ள ரோட்டில் திரண்டு நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது. இந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் (33) என்ற வாலிபர் அந்த வழியாக பைக்கில் வந்தார். கூட்டம் காரணமாக அவரால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்கு நின்றவர்களிடம் ஒதுங்கி இருக்குமாறு அவர் கூறினார். இதில் ஆத்திரமடைந்த மணமகனின் தந்தை நெல்சன் உள்பட சிலர் அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் ரஞ்சித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை பலனளிக்காமல் ரஞ்சித் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மணமகனின் தந்தை நெல்சன் உள்பட திருமண வீட்டை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். வாலிபர் ரஞ்சித்தை திருமண வீட்டினர் தாக்கும் வீடியோ சமூக இணையதளங்களில் பரவி வருகிறது.