20,614 பந்துகள் கடைசியில் ஒரு நோ பால் சாதனையை இழந்த அஷ்வின்

இதுவரை நோ பாலே வீசாமல் 20,614 பந்துகளை அஷ்வின் வீசினார். கடைசியில் நேற்று முதல் முதலாக இங்கிலாந்துக்கு எதிராக நோ பால் வீசியதின் மூலம் ஒரு அபூர்வ சாதனை அவரது கையை விட்டு நழுவியது. தமிழகத்தைச் சேர்ந்த வலதுகை சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2010ல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 போட்டியில் இவர் அரங்கேற்றம் நடத்தினார். அடுத்த ஆண்டு 2011ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அரங்கேறினார்.

75வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இவர் இதுவரை 380 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 111 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள இவர், 150 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தற்போது உலக அளவில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் அஷ்வின் சத்தமில்லாமல் வேறு ஒரு சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை இவர் 20,500க்கும் மேற்பட்ட பந்துகளை வீசியுள்ளார். நேற்று வரை இவர் டெஸ்ட் போட்டியில் நோ பாலே வீசியது கிடையாது என்ற சாதனை இவரிடம் இருந்தது. ஆனால் நேற்று இந்த சாதனை அஷ்வினிடமிருந்து பறிபோனது.

20,614 பந்துகளை வீசி முடித்த பின்னர் நேற்று இவர் முதன் முதலாக ஒரு நோ பாலை வீசினார். நேற்று அஷ்வின் தன்னுடைய 38வது ஓவரில் ஜோ ரூட்டுக்கு எதிராக பந்துவீசும் போது தான் முதன்முதலாக கிரீசை விட்டு தாண்டி நோ பால் வீசினார். இதற்கு முன் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான் தான் அதிகபட்சமாக 15,340 பந்துகளை வீசினார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை நோ பாலே வீசியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வானை விட கூடுதல் பந்துகளை அஷ்வின் வீசியுள்ள போதிலும் நோ பாலே வீசாமல் ஓய்வு பெற்ற அவரது சாதனையை அஷ்வினால் முறியடிக்க முடியாது.

More News >>