கடவுளிடமிருந்து வந்த கட்டளை 6 வயது மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்
6 வயதான சொந்த மகனை தாய் கழுத்தை அறுத்துக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடவுளிடமிருந்து மகனை பலி கொடுக்குமாறு கட்டளை வந்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அந்த தாய் போலீசில் தெரிவித்துள்ளார். இவர் தற்போது 3 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் இந்த கொடூர சம்பவம் இன்று நடந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது பூளக்காடு கிராமம். இப் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (33). இவர் டாக்சி டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஷாஹிதா (28). இவர்களுக்கு ஆமில் (6) என்ற மகன் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஷாஹிதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று இரவு சுலைமானின் குடும்பத்தினர் வழக்கம் போல வீட்டில் தூங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஷாஹிதா தன்னுடைய மகன் ஆமிலை தூக்கத்தில் இருந்து எழுப்பிய பின் அவனை குளியலறைக்கு கொண்டு சென்றார். பின்னர் மகன் ஆமிலை ஷாஹிதா கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த சிறுவன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த விவரம் எதுவுமே ஷாஹிதாவின் கணவன் சுலைமானுக்கு தெரியாது. மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் ஷாஹிதாவே பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து மகனை கொலை செய்த விவரத்தை கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக ஷாகிதாவின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின் ஆமிலின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஷாஹிதாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, மகனை கழுத்தை அறுத்துக் கொல்ல வேண்டும் என்று கடவுளிடம் இருந்து கட்டளை வந்ததாகவும், அதனால் தான் மகனை கொன்றதாகவும் அவர் போலீசில் தெரிவித்தார். வீட்டுக்கு போலீஸ் வந்த பின்னர் தான் தன்னுடைய மகன் கொல்லப்பட்ட விவரம் சுலைமானுக்கு தெரியவந்தது. ஷாஹிதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாலக்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.