ரூ.6.20 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
ரஜினிகாந்த் நடித்து 2014ல் வெளியான அனிமேஷன் திரைப்படம் கோச்சடையான். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய இப்படம் தமிழில் வெளியான முதல் அனிமேஷன் 3டி தொழில்நூட்பத்தில் உருவானது.
ரஜனிகாந்த் மனைவி லதா ரஜனிகாந்த் இயக்குனராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கி கோச்சடையான் படத்தை தயாரித்தது. ஆட்பீரோ நிறுவனத்துக்கு கோச்சடையான் பட விநியோக உரிமத்தில் 12 சதவீதம் வழங்குவதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துள்ளார்.
கோச்சடையான் ரிலீஸ்க்கு தயாரான போது பட உரிமையையும் தராமலும், வாங்கிய கடனையும் திருப்பி தராமலும் இழுத்தடிப்பதாக ஆட்பீரோ நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் கடனாக வாங்கிய தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதி தொகையை தரவில்லை என்று கூறி லதா ரஜினிகாந்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆட்பீரோ நிறுவனம் சார்பில் கர்நாடக நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. லதா ரஜினிகாந்த்தின் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், வாங்கிய 10 கோடி கடன் தொகையில் ரூ.9.20 கோடியை திருப்பி செலுத்தி விட்டதாகவும் மீதம் ரூ.80 லட்சம் மட்டுமே திருப்பி தர வேண்டும் என்று கூறியது.
இதற்கு, ஆட் பீரோ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ரூ.10 கோடி கடனுக்கான வட்டியை சேர்த்து ரூ.14.90 கோடி தர வேண்டும் என்றும் இதில் ரூ.8.70 கோடி மட்டுமே திருப்பி கொடுத்துள்ளதாகவும் மீதம் உள்ள ரூ.6.20 கோடி மீடியா ஒன் குளோபல் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தர வேண்டும் என்று பதில் மனுவில் கூறியது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆட் பீரோ நிறுவனம் அளித்த பதில் மனுவில் "மீடியா ஒன் குளோபல் என்டேர்டைன்மெண்ட் வாங்கிய கடனுக்கு வட்டியை சேர்த்து மொத்தம் 14.90 கோடி அதில் திருப்பி கொடுத்த 8.70 கோடியை தவிர்த்து மீதமுள்ள ரூ.6.20 கோடியை 12 வாரத்துக்குள் ஆட்பீரோ நிறுவனதுக்கு செலுத்த வேண்டும். தவறினால் அந்த தொகையை லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com