சி.வி.சண்முகம் சிறுநரிதான்.. மதகரி யார்? டி.டி.வி.ட்வீட்
வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? என்று அண்ணாவின் வாசகங்களை குறிப்பிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னைக்கு காரில் திரும்புகிறார். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு விடுதிக்கு சென்ற போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியை பயன்படுத்தியது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் கூறினர். மேலும், அவர் திரும்பி வரும் போது அதிமுக கொடியை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சசிகலா தரப்பினரின் அதிகாரப்பூர்வ நாளேடானா நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் நேற்று(பிப்.6) ஒரு கட்டுரை வெளியாகியது. அதில், சசிகலா கொடி கட்டியதற்கே கலங்குகிறீர்களே, அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களில் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சசிகலாவுக்கு ஓசூர் முதல் சென்னை வரை பல இடங்களில் வரவேற்பு அளிக்கவும், ஜெயலலிதா நினைவிடத்துக்கு பேரணியாக சென்று மரியாதை செலுத்தவும் அ.ம.மு.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டதாக தகவல் பரவியது. உடனே, அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.விசண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் டிஜிபியை சந்தித்து, சசிகலா தரப்பினர் சட்டம்ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக புகார் கொடுத்தனர். பின்னர், சி.வி.சண்முகம் பேட்டியளித்த போது, சசிகலாவை கடுமையாக விமர்சித்தார். சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடித்தவர்.. என்று கூறினார். உடனடியாக ஒரு நிருபர், அதே சொத்துகுவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா தானே! அவரையும் அப்படித்தான் சொல்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பதிலளிக்காமல் விருட்டென்று சென்று விட்டார் சி.வி.சண்முகம்.
அருகில் இருந்த மதுசூதனனோ ஆத்திரத்துடன் அந்த நிருபரிடம், செத்து போனவங்களப் பத்தி கேட்கறீயே. நாளை நீயும் செத்து போவேல்ல.. என்று கூறினார். இந்நிலையில், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? மாற்றார் மனம் போன போக்கில் ஏசுவது கேட்டா உனக்கு இந்த வாட்டம்? வீரக்குலத்தில் உதித்தவனே!
மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து மதகரி (மதம் பிடித்த யானை) மீது வீசினானாமே உன் முன்னோர்களில் ஒரு வீரன் களத்தில்; மறந்துவிட்டாயோ? வீசினான் என்றவுடன் வசைமொழியின் விருப்பம் தீரும் வரை, விசாரம்(கவலை) குறையும் அளவு நானும் வீசவா என்று கேட்கத் தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? --பேரறிஞர் அண்ணா. இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியிருக்கிறார். இதன்மூலம், சி.வி.சண்முகத்தை சிறுநரியாகவும், அவரை ஏவிவிடும் எடப்பாடி பழனிசாமியை மதம் பிடித்த யானையாகவும் சித்தரித்து கண்டித்திருக்கிறார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.