விசுவாசம் இல்லாதவர்.. பத்திரிகை விளம்பரத்தில் எடப்பாடியை மறைமுகமாக போட்டு தாக்கும் ஓ.பி.எஸ்..

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார். விசுவாசம் கெட்டவர் எடப்பாடி என்ற வகையில் ஓ.பி.எஸ். விமர்சனம் அமைந்திருக்கிறது. சசிகலாவால் கூவத்தூர் விடுதியில் முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவின் பேச்சைக் கேட்டு அவரை அதிமுக எம்எல்ஏக்கள், முதலமைச்சராக தேர்வு செய்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலில் விழுந்து அவரை வணங்கினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தினமும் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, தன்னை முதலமைச்சராக ஆக்கியது சசிகலா அல்ல. அதிமுகவின் எம்எல்ஏக்கள்தான் தேர்வு செய்தனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

தற்போது, பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை(பிப்.8) காலை சென்னைக்கு காரில் திரும்புகிறார். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு விடுதிக்கு சென்ற போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியை பயன்படுத்தியது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் கூறினர். மேலும், சசிகலா மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னை தேர்வு செய்த சசிகலாவுக்கு விசுவாசமாக இல்லை என்றும், நன்றிகெட்டவர், பச்சை துரோகி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் என்றெல்லாம் குறிப்பிட்டு சசிகலா தரப்பு பத்திரிகையான நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டு வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ஓ.பன்னீர்செல்வமும் மறைமுகமாக எடப்பாடியை விமர்சிப்பதுதான் தற்போது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இன்று(பிப்.7) தினமலர் நாளேட்டின் முதல் பக்கத்தில் முழுபக்க விளம்பரம் தரப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில், விசுவாசத்தில் நிகழ்கால பரதன் என்ற கொட்டை எழுத்தில் தலைப்பிட்டிருக்கிறார்கள். விளம்பரத்தில் ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கி விட்டு, மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டதாக வரலாறே இல்லை. அந்த புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்-- ஜெயலலிதா என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் அதில், புரட்சித்தலைவியின் புகழாரம் என்று தலைப்பிட்டு, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பு வகித்த இந்த 5 மாத காலத்தில் மிகுந்த பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் நடந்து கொண்டிருக்கிறார். எல்லோரும் பாராட்டும் வகையில் செயல்பட்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ் போன்று ஒருவரை நான் தொண்டனாக பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்-- ஜெயலலிதா என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அத்துடன், ஓ.பி.எஸ்.சை வெகுவாக புகழ்ந்தும் மறைமுகமாக அது எடப்பாடி பழனிசாமியை இகழும் வார்த்தைகளையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை வருமாறு: நம்பிக்கை, நாணயம், உழைப்பு, கைராசி இந்நான்கும் பல வேளைகளில் விசுவாசம் என்ற ஒற்றைச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகிறது. இதிகாசப் புராணங்கள் தொடங்கி தேவாலயங்களில் வாசிக்கப்படும் பைபிளின் அத்தியாயங்கள் வரை அனைத்திலும் உச்சரிக்கப்படுவது விசுவாசம் என்ற ஒற்றை வார்த்தைதான். இந்த விசுவாசம் பெரும்பாலும் அரசியல் உலகத்தில் எப்போதுமே பெரும் பற்றாக்குறையைத் தான் எதிர்கொண்டிருக்கிறது.அப்படி விசுவாசம் என்ற சொல்லை உச்சரிக்கும் போதெல்லாம் அதற்கு சாட்சி என்று விரல் நீட்டப்படுபவர் ஓ.பி.எஸ். எனப்படும் ஓ.பன்னீர்செல்வம்.

இப்படி எழுதப்பட்டிருக்கிறது. தனக்கு பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கு தான் உண்மையான விசுவாசியாக இருந்ததாக ஓ.பி.எஸ் கூறியிருப்பதன் மூலம், முதல்வர் பதவி தந்த சசிகலாவுக்கு எடப்பாடி கொஞ்சம் கூட விசுவாசமாக இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அதே போல், விசுவாசத்தின் அடையாளமான நம்பிக்கை நாணயம் எதுவுமே எடப்பாடிக்கு இல்லை என்றும் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், ஓ.பி.எஸ். மீண்டும் சசிகலா பக்கம் போய் விடுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதே போல், முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ஓ.எஸ்.மணியம் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலாவைப் பார்க்கச் செல்வார்கள் என்றும் பேசப்படுகிறது. இதனால் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

More News >>