நெல்லை போலீஸ் ஸ்டேஷனில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
நெல்லை தச்சநல்லூரில் காவல் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான கண்ணபிரான் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நீதிமன்றம் விதித்த நிபந்தனையின் அடிப்படையில் நெல்லை மாநகர எல்லைக்குட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இன்று காலை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கம்போல் கையெழுத்திட அவர் வந்துள்ளார். அப்போது ஒரு பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீசப்பட்ட வெடிகுண்டு குறைந்த சக்தி கொண்டது என்பதாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனினும் காவல் நிலைய வளாகத்தில் தரையில் லேசான சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அங்கு உள்ள போலீசார் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில போலீசார் துரிதமாக செயல்பட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி சென்றனர் ஆனால் பைக்கில் மிக வேகமாக அவர்கள் தப்பிச் சென்று விட்டதால் அவர்களை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிதறிய வெடிகுண்டின் பாகங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். காவல் நிலைய வளாகத்திலேயே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.