நாமக்கல் : அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

நாமக்கல் அருகே மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு அறிவித்த படி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டின் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆலாம்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.. அமைச்சரின் வீட்டிற்கு செல்லும் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்த வழியை பொதுமக்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 ம் தேதி இதே பிரச்சினைக்காக விவசாயிகள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

உயர் மின் கோபுரம் அமைக்கும் நிலத்திற்கு ஒரு கி.மீட்டருக்கு அதிகபட்சம் 4 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றவும், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதும் விவசாயிகள் கோரிக்கைகளாகும். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின நிறுவனர் ஈசன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரின் வீட்டை முற்றுகையிட போலீசார் அனுமதிக்காததால் விவசாயிகள் அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த போராட்டம் குறித்து நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் உயர்மின் கோபுரம் அமைக்க அரசின் சார்பில் எவ்வளவு நிவாரணம் தொகை வழங்குவதாக அறிவித்த தொகையை அரசு வழங்கிவிட்டது. இரண்டு மூன்று முறை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எந்த மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்ட தொகை வரவில்லையோ அந்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி உடனடியாக பெற்றுத் தருகிறேன் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டியல் வழங்கப்படவில்லை. பட்டியல் வந்ததும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்று உள்ளனர். என தெரிவித்தார்.

More News >>