அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு தத்தளிக்கும் இந்தியா பாலோ ஆனை தவிர்க்க போராட்டம்
இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. பாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது. இந்தியா இன்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை டெஸ்டில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அபாரமாக ஆடி 578 என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. இந்த அணியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். இவர் 218 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்தபடியாக தொடக்க ஆட்டக்காரர் சிப்லி 87 ரன்களும், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் குவித்தனர். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஷஹ்பாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். ஆனால் இருவருமே மிக வேகமாக ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா 6 ரன்களிலும், கில் 29 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி 11 ரன்களிலும், துணை கேப்டன் ரகானே 1 ரன்னிலும் வந்த வேகத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள். ஆனால் புஜாராவும் ரிஷப் பந்தும் சிறப்பாக ஆடினார்கள். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த புஜாரா 73 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 88 பந்துகளில் 91ரன்கள் குவித்தார். இவர் டாம் பெஸ்சின் பந்தில் ஜேக் லீச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 5 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். இந்தியா 225 ரன்களில் 6வது விக்கெட்டை இழந்தது. தற்போது வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களிலும், அஷ்வின் 8 ரன்களிலும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவால் பாலோ ஆனைக் கூட தவிர்க்க முடியுமா என்பது சந்தேகமே. பாலோ ஆனை தவிர்ப்பதற்கு இந்தியாவுக்கு இன்னும் 121 ரன்கள் தேவையாகும். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்தை விட இந்தியா இன்னும் 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.