ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் அதிர்ச்சி
ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் அவதி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையோரம் குவித்து வைத்து இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இப்பகுதியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேவதானம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விவசாயிகள் நெல் அறுவடை செய்து, நன்கு காய வைத்து, அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பதத்தை வைத்து நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூடைகளை இந்த நிலையத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எந்தக் காரணமும் குறிப்பிடப்படாமல் திடீரென நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டு விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை மற்றும் நெல் குவியல்களை இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். தற்போது மழை பெய்யாமல் வெயில் அடித்து வருவதால் நெல் ஓரளவு பாதுகாப்பாக இருப்பதாக விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டிருந்தது விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தனி நபர்கள் சிலர் கொள்முதல் செய்யும் நெல் மிகக்குறைந்த விலைக்கு எடுக்கப்படுவதால் அவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த கொள்முதல் நிலையம் மூடப்பட்டு விட்டதாக விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து உரிய விலை வழங்குமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.