ஒரு பணிக்கான நிதியை வேறு பணிக்கு பயன்படுத்த உயர்நீதி மன்றம் தடை

ஊராட்சிகளின் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை வேறு பணிக்கு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தந்து மனுவில் ஜனநாயக முறைப்படி நான் ஒன்றிய தலைவராக செயல்பட கலெக்டர், பிடிஓ உள்ளிட்டோர் அனுமதிப்பதில்லை. ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

2019-20ம் ஆண்டில் தெற்கு சேர்பட்டி சாலை புதுப்பித்தல் பணிக்கு, ரூ.25 லட்சமும், காராம்பட்டி சாலை பலப்படுத்தல் பணிக்கு ரூ.29 லட்சமும் வழங்கிட போதிய நிதி இல்லாததால் தாய் திட்ட சேமிப்பில் இருந்து கடனாக வழங்குவதாகவும், இந்தப் பணத்தை மணப்பாறை ஒன்றிய பொது நிதியில் வரவு வைத்து, பின்னர் மாவட்ட கலெக்டர் பெயருக்கு வங்கி வரைவோலையாக அனுப்ப வேண்டும் என்றும் கூறி மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு நிதியை மாற்ற அவருக்கு அதிகாரம் இல்லை. இதற்கான பணத்தை மாநில நிதிக்குழு பொது நிதியில் இருந்து கொடுத்தால் ஒன்றிய நிர்வாகம் முடங்கிவிடும் அபாயம் உருவாகும்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஊராட்சி பணிகளை முடக்கும் வண்ணம் உள்ளது. எனவே, நிதியை வேறு பணிக்கு பயன்படுத்தும் இணை இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இது சட்டவிரோதம் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இணை இயக்குநரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததிடன் இது குறித்து கலெக்டர், ஊரக வளர்ச்சி இணை இயக்குநர், மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணயைை பிப். 12 க்கு ஒத்தி வைத்தார்.

More News >>