கூட்டணி குறித்து கேள்வி கேட்காதீங்க.. நிருபர்களிடம் சுதீஷ் டென்ஷன்
கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய டைம் இருக்கு எனவே கூட்டணி பற்றி கேள்வி கேட்காதீங்க என கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் தேமுதிக துணைச் செயலாளர் சதீஷ் ஆவேசப்பட்டார். கிருஷ்ணகிரியில் தேமுதிக சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் பேசியதாவது: தேமுதிக இப்போது வரை, அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. விரைவில் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடி, கருத்துக்கள் பெற்று, அதன் பிறகு தலைவர் விஜயகாந்த் கூட்டணி பற்றி அறிவிப்பார். தமிழகத்தைப் பொறுத்தவரை தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். தேமுதிக மட்டுமே ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறது.
மற்ற கட்சிகள் அப்படி நடத்துவதில்லை. வில்லை. சிலர் தோட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. இங்கிருந்து எல்லாம் தோட்டத்துக்கு செல்கிறார்கள், பேசுகிறார்கள், திரும்பி வருகிறார்கள். தந்தையும், மகனும் வெளியில் வரவே இல்லை. நாங்கள் தினந்தோறும் கூட்டங்களை நடத்துகிறோம். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முரசு சின்னத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் தான் வெற்றி பெறுவர். நாம் யாரையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்கள்தான் நம்மை தேடி வர வேண்டும். மீண்டும் சொல்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை தேமுதிக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணி தான் ஆட்சி அமையும் என சுதீஷ் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக சுதீஷ் கூறியதாவது: கூட்டணி குறித்து கேள்வி கேட்காதீர்கள். அதை குறித்துதான் தொடர்ந்து இரண்டு மாதங்களாக கூறி வருகிறோம். திருப்பி, திருப்பி அதையே கேட்காதீங்க. அதிமுக கூட்டணியில், தேமுதிக உடன் எவ்வித சலசலப்பும் இல்லை. நாங்கள் வெளியில் வருகிறோம், எங்களிடம் இதைக் கேட்கிறீர்கள். திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெளியில் வருவதில்லை. அதனால் அவரிடம் நீங்கள் கேட்கவில்லை. இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. அது வரை பேச்சுவார்த்தை நடைபெறும். முதலில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதன் பிறகு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச வேண்டும். இன்னும் நிறைய டைம் இருக்கிறது. கூட்டணி குறித்து எந்த கட்சியும் இதுவரையும் பேச்சு நடத்தவில்லை என்றார்.