புதுச்சேரி பாஜக கூட்டணி யார் தலைமையில்? ரங்கசாமியால் திடீர் சர்ச்சை
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி யார் தலைமையில் அமையும் என்பது குறித்து ரங்கசாமி தெரிவித்த கருத்தால் திடீர் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில என் ஆர் காங்கிரஸ் கட்சியின் 11 ஆம் ஆண்டு தொடக்க விழா, லாஸ்பேட்டை யில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி மத்தியில் பேசினார்.
பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரங்கசாமி, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர். எங்களது திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கபடும். தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும். பாஜக கூட்டணி யார் தலைமையில் அமையும் என்ற கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கும் போதுதான் அது குறித்த முடிவு வரும் என்று பதிலளித்தார்.
புதுச்சேரியில் பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கொண்ட கூட்டணியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்று பாஜக தேசிய தலைவர் நட்டா சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில் யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யபடும் என்று ரங்கசாமி தெரிவித்திருப்பது பாஜக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.