கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை - கனிமொழி குறித்து எச்.ராஜா அறுவறுப்பான ட்வீட்
கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அறுவறுப்பாக ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுவதாகவும், அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் நிர்மலா தேவி விவகாரம் குறித்து பன்வாரிலால் புரோஹித்திடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கேள்வி எழுப்ப முயன்றார்.
அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை” என கனிமொழி பதிவிட்டார்.
இந்நிலையில் கனிமொழி குறித்து நாகரிகமற்ற முறையில் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (Illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா? மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே" என குறிப்பிட்டுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, திமுகவினர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, கோவை, மேலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com