கேரளாவில் 2 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 262 பேருக்கு கொரோனா... பள்ளிகள் மூடப்பட்டன
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 262 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இரண்டு பள்ளிகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக தொடக்கக் கட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த கேரள மாநிலத்தில் தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகச் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. இதனால் நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,059 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,08,26,363 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 78 பேர் இந்தியாவில் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,54,996 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் கேரளாவில் நேற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியது தெரியவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6,075 பேருக்கு நோய் பரவியது. இது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பரவிய நோயாளிகள் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இங்குள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 262 பேருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மாநில சுகாதாரத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்ற இடத்திற்கு அருகே உள்ள மாறஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 148 மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட 39 பேருக்கும் நோய் பரவியது தெரியவந்தது. இதே போல இப்பள்ளியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா பரவியது தெரியவந்தது. இதையடுத்து இந்த பள்ளியிலும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 39 மாணவர்களுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் நோய் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த இரு பள்ளிகளையும் உடனடியாக மூட மாவட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவி வருவது கல்வித் துறைக்கும், சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.