சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிக்க முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.கேரளாவில் கொரோனா பரவலைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 7 மாதங்கள் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் முதல் கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முதலில் தினமும் 500 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மண்டல பூஜைக்காகக் கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அப்போது தொடக்கத்தில் 1,000 பக்தர்களும் பின்னர் பக்தர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து எண்ணிக்கை 2,000 ஆகவும், கடைசியில் 5,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காகப் பிப்ரவரி 12ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.கேரளாவில் தற்போது கொரோனா பரவல் அதிகளவில் இருப்பதால் இந்த மாதம் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் மாசி மாத பூஜையில் பக்தர்களை அனுமதிப்பது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என்றே கூறப்படுகிறது. கேரளாவில் தற்போது நோய் பரவல் அதிகமாக இருப்பதால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது .இது தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும். பிப்ரவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

More News >>