புற்றுநோய் பாதிப்பில் நிகழ்ந்தது என்ன? நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்த நினைவுகள்..
சில நாட்களுக்கு முன்பு, உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் இந்த நோயை எதிர்த்துப் போராடிய தனது அனுபவத்தைப் பற்றித் பகிர்ந்துகொண்டார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா காலகட்டத்தில் மும்பை வீட்டிலிருந்த சஞ்சய் தத்துக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தொற்று இல்லை என்று தெரிய வந்தது. மூச்சு திணறலுக்குச் சிகிச்சை அளித்து டாக்டர்கள் குணப்படுத்தினார்.
ஆனால் நுரையீரலில் சஞ்சய் தத்துக்கு கேன்சர் பாதிப்பு முற்றிய நிலையில் இருப்பதாக கண்டறிந்து தெரிவித்தனர்.இதையடுத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர் நடிப்பிலிருந்து சில காலம் ஓய்வு எடுக்கப்போவதாகக் கூறிவிட்டு கேன்சர் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அப்போது அவர் உடல் தோற்றம் மெலிந்து ஆளே ஒல்லிபிச்சானாகி இருந்த படம் வெளியாகி வைரலானது. சிகிச்சையிலிருந்து உடல் நலம் அடைந்தவர் மீண்டும் படப் பிடிப்புக்குச் செல்ல தயாரானார். யஷ் நடிக்கும் கே ஜி எஃப் 2 ம் பாகத்தில் அகீரா என்ற பயங்கர வில்லனாக நடிக்கிறார்.
இதில் கிளைமாஸ் காட்சியில் டூப் போடாமல் தரையில் உருண்டும் தாவி விழுந்தும் நடித்து அசத்தினார். உடல் நல பாதிப்பிலிருந்தும் அவர் டூப் போடாமல் நடித்தது படக் குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சஞ்சய்தத்தின் ஈடுபாட்டைப் படக் குழு பாராட்டியது. சில தினங்களுக்கு முன் தனது கேன்சர் பாதிப்பு பற்றிய நினைவைப் பகிர்ந்து கொண்டார் சஞ்சய் தத். 50க்கு 50 வாய்ப்பு என்று டாக்டர்கள் கூறியது எனக்குள் நிறையக் கோபத்தை உண்டாக்கியது, நான் ஏன் என்று யோசித்தேன். மக்கள் தங்கள் சிகிச்சையை முடிவு செய்ய நீண்ட யோசனையில் ஆழ்கின்றனர். அதன்பிறகே சிகிச்சையைத் தீர்மானிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் எனக்கு அதிக நேரம் இல்லை என்று உணர்ந்ததால் விரைவாக ஒரு முடிவை எடுத்தேன்.
முதலில் எனது நோயை ஏற்றுக்கொண்டேன், புற்று நோயை எதிர்த்துப் போராடுவேன் என்று நினைத்தேன்.நான் முதல் முறையாக டாக்டரை சந்திக்க வந்தபோது, இந்த மனநிலையுடன்தான் இருந்தேன் என்றார்.சஞ்சய்தத்தின் தைரியம் அவரது சிகிச்சைக்கு மிகவும் கைகொடுத்தது என உறவினர்கள் தெரிவித்தனர்.சஞ்சய் தற்போது 'கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.