ஒருவழியாய் தமிழகம் வந்தார் சசிகலா..
திட்டமிட்டபடி இன்று காலை பெங்களூரு தேவனஹள்ளி சொகுசு விடுதியிலிருந்து காலை 7 மணிக்கே புறப்பட்டுவிட்டார். ( 7.30 முதல் 9 மணி வரை மணிக்கு ராகுகாலம் என்பதால்) ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு தமிழகத்தை நோக்கி புறப்பட்டார் சசிகலா.வழிநெடுக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான தொண்டர்கள் மேள தாளங்களுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கக் காத்திருந்தனர். வழக்கம்போல் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே அவர் பயணித்தார்.
இதைக்கண்ட காவல்துறை அதிமுக கொடியை அவர் பயன்படுத்துவது சட்டப்படி தவறு. அப்படி கொடிகட்டி வந்தால் தமிழக எல்லையில் கொடியை அகற்றுவதாக எச்சரிக்கை விடுத்தனர்.தமிழக எல்லைக்குள் வந்ததும் காரில் கொடியை அகற்றுமாறு போலீசார் அவருக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் நோட்டீசை பெற்றுக் கொள்ள முதலில் சசிகலா மறுக்கவே, மேடம் தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். எப்படியாவது வாங்கி கொள்ளுங்கள் என்று போலீஸார் வலியுறுத்த நோட்டீசை வாங்கிக்கொண்டார். அவர் வந்த காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றப்பட்டு விட்டது.
அதேசமயம் சசிகலா தொடர்ந்து அந்த காரில் பயணிக்காமல் காரை விட்டு இறங்கி வேறு ஒரு காரில் பயணித்தார். அந்த மாற்று கார் ஓசூர் சாமணப்பள்ளியை சேர்ந்த அதிமுக வார்டு கவுன்சிலர் சம்பங்கி என்பவருக்கு சொந்தமானதாம் அந்தக் காரில் அதிமுக கொடி இருந்ததால் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் உயரதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல்கள் பறக்க.. சரி.சரி இதைப் பெரிது படுத்த வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து சிக்னல் வந்ததாம். இதனால் அதிமுக கொடியுடன் கூடிய காரிலேயே சசிகலா பயணத்தைத் தொடர்ந்தார்.
வழிநெடுக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் சசிகலாவை சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் அவருக்கு மலர் தூவி வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓசூர் வந்தடைந்த சசிகலா அங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் கோயிலில் வழிபட்டார் சசிகலா. அப்போது அவர் கழுத்தில் அதிமுக கரை போடப்பட்டு இருந்த துண்டை அணிந்திருந்தார். தொடர்ந்து..ஓசூர் சிப்காட் வளாகத்தில் இருக்கும் பிரித்யங்கரா தேவி கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
சசிகலாவை வரவேற்க நேற்று இரவு முதலே தமிழக-கர்நாடக எல்லையில் தொண்டர்கள் குவிந்தனர். வழி நெடுக அவர்கள் போலீஸாரின் கெடுபிடிக்கு ஆளாகினர். சில இடங்களில் கடும் வாக்கு வாதத்திற்கு பிறகே அவர்களது வாகனங்களை போலீசார் அனுமதித்தனர். காலையில் தமிழக எல்லையான அத்திப்பள்ளி அருகே சசிகலா கார் வந்தபோது இரு மார்க்கங்களிலும் வேறு வாகனங்களோ, பயணிகள் வாகனங்களோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த வழியே சென்றவர்கள்பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.