இங்கிலாந்து 5 விக்கெட்டுகளுக்கு 119 ரன்கள் அஷ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்
சென்னை டெஸ்டில் இன்று இங்கிலாந்து தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தற்போது இங்கிலாந்து 360 ரன்கள் முன்னிலையில் உள்ளது.சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்தியா, இங்கிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்தை விட இந்தியா முதல் இன்னிங்சில் 241 ரன்கள் பின்தங்கியது.
இந்திய தரப்பில் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்தார். வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடி 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா பாலோ ஆன் பெற்ற போதிலும் இங்கிலாந்து தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய அஷ்வினின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் சிப்லி 16 ரன்களிலும், லாரன்ஸ் 18 ரன்களிலும், முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ஜோ ரூட் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது. தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 360 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒல்லி போப் 18 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 14 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.