பிப் 21ல் சென்னையில் ம.நீ.ம கட்சி மாநாடு: கமல் தகவல்
இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. நாம் வேடிக்கை மனிதரும் அல்ல. வேடிக்கை பார்ப்பவரும் அல்ல. ஆட்சி அதிகாரத்துக்குக் காத்திருக்காமல், ஓட்டு அரசியல் செய்யாமல், தமிழகத்தின் மீதான உண்மையான அக்கறையில் கிராம சபைகள் மீட்டெடுப்பு, ஸ்டெர்லைட் போராட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் கால நிவாரண பணிகள் என்பது உட்பட நாமே தீர்வு என்று தொடர்ச்சியாகச் செய்து வரும் களப்பணிகளும், சட்டப் போராட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கட்சியின் மரபணுவான நேர்மை, திறமை, அஞ்சாமை ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை.
தமிழகத்திலும், புதுவையிலும் முதல்முறையாகச் சட்டமன்ற தேர்தலில் களம் காணத் தயாராகி வருகிறோம். கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையிலும், தேர்தல் தொடர்பாகவும் வரும் 21ம் தேதி சென்னையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. ஆகவே, மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டுக்கு அவசியம் வர வேண்டும். பழிபோடும் அரசியல், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, வழிதேடும் அரசியல், வழிகாட்டும் அரசியலுக்குத் தொடக்க உரை எழுதுவோம்.
இவ்வாறு கமலஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.