டெஸ்ட் போட்டிகளில் 300 வது விக்கெட்டை வீழ்த்திய டெல்லி புயல்!
உலக கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமும், அதற்கான தனி அங்கீகாரமும் உள்ளது. சர்வதேச ஒருநாள், இருபது ஓவர் போட்டி, உள்ளூர் இருபது ஓவர் போட்டி என கிரிக்கெட் உலகம் அதகளப்படுவதால் டெஸ்ட் போட்டிகளின் சாராம்சம் சற்று குறைந்து கொண்டுதான் வருகிறது. ஆனாலும் டெஸ்ட் போட்டிகளின் மீதான விறுவிறுப்பு மோசமான அளவிற்குக் குறையவில்லை எனலாம். சமீபத்தில் இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடர் அத்தகைய விறுவிறுப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் அதீத பரபரப்பை ரசிகர்கள் இடையே ஏற்படுத்தி வருகிறது. முதல் டெஸ்ட் தொடரானது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா பங்கேற்று உள்ளார். இது இவரின் 97 வது டெஸ்ட் போட்டியாகும்.
இஷாந்த் ஷர்மா 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 98 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இஷாந்த் ஷர்மா 14 வருடங்களுக்கு முன் வங்காளதேசத்திற்கு எதிராகத் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். 14 வருடங்கள் கழித்து 300 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை அடைந்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.இஷாந்த் ஷர்மாவின் இந்த சாதனையை முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். வாழ்த்துக்கள் இஷாந்த்.