போலி சான்றிதழ் மூலம் பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழைப் போலவே போலி சான்றிதழ் தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் தனது பெயர் மற்றும் சான்றிதழை போலியாகத் தயார் செய்து யாரே ஏமாற்றி வருவதாக சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரத்தைச் சேர்ந்த மங்கம் கிரண்குமார் என்பவர் டாக்டர் முப்பு கிரண்குமாரின் மருத்துவ சான்றிதழ் போலப் போலி சான்றிதழ் தயார் செய்து சீகாகுளம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து மங்கம் கிரண்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த போலி மருத்துவ சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.