கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளிவைப்பு

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், செல்போன் மூலமாகக் கடன் பெறுவதற்காகப் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது .கடன் பெறுவதற்கான, பல்வேறு செயலிகள் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. செல்போன் செயலி மூலம் கடன் பெறுபவர்களிடம் மிக மிக அதிகமான வட்டி வசூலிக்கப்படுகிறது.

செல்போன் செயலிகளில் கடன் தரும் நிறுவனங்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் கடைப்பிடிப்பதில்லை. கடன்களைச் சரியாகச் செலுத்தாதவர்களின் புகைப்படங்களைச் செயலியில் உள்ள உறுப்பினர்களுக்குப் பகிர்வது, செல்போன் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டு தவறாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக, கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். பஜாஜ் பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50க்கும் மேற்பட்ட செயலிகள் இதுபோன்ற கடன்களை வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனங்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த செயலிகள் மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடன் வழங்கும் பல செயலிகள் சீனா நாட்டுடன் கூட்டு வைத்து மறைமுகமாகச் செயல்படுவது தெரிய வருகிறது. எனவே இது போன்ற கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி இணையதளம் மற்றும் செயலி மூலம் கடன் வழங்குபவர்களை முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோதமாகச் செயல்படும் கடன் செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் நீதிபதிகள் வழக்கை வரும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

More News >>