மகாராஷ்டிராவில் பாஜக நிர்வாகியை அவமானப்படுத்திய சிவசேனா தொண்டர்கள் கைது
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பாஜக நிர்வாகியை அவமானப்படுத்திய சிவசேனா கட்சி தொண்டர்கள் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சோலாப்பூர் மாவட்ட பாஜக தலைவர் ஷிரிஷ் கட்டேகர் தரக்குறைவாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், ஷிரிஷ் கட்டேகரை பிடித்து அவர் மீது கருப்பு மை ஊற்றியும், சேலை அணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இது குறித்து சிவசேனா தொண்டர்கள் கூறுகையில், எங்கள் முதல்வருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியது கட்டேகர் தான். எங்களை பொறுத்தவரை, உத்தவ் ஒரு மதிப்பிற்குரிய நபர், அவருக்கு எதிராக எதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம், எங்கள் நடவடிக்கைக்காக சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 17 சிவசேனா தொண்டர்கள் மீது சோலாப்பூர் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, 17 பேரையும் கைது செய்துள்ளனர்.