இவற்றை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது... எவை தெரியுமா?

அதிக அளவில் சாப்பிடுவது அல்லது நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது போன்றவை ஆரோக்கியத்துக்கு ஏற்றவை அல்ல. குறிப்பாக, உடல் எடையைச் சீராகப் பராமரிக்கும் அக்கறை கொண்டவர்கள், கண்டதையும் சாப்பிட இயலாது. ஒரு நாளில் நாம் சாப்பிடும் தேவைக்கு அதிகமான கலோரிகள் நம் உடலில் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. ஆகவே, எவற்றைச் சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில உணவுப் பொருள்களை எவ்வளவு அதிகமாகச் சாப்பிட்டாலும் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. உடல் எடையைக் குறைப்பதில் அல்லது கூடாமல் பராமரிப்பதில்

கவனமாக இருப்பவர்கள் சாப்பிடக்கூடிய சில உணவுப் பொருள்கள்: காரட்

காரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண்களின் ஆரோக்கியம், கூர்மையான பார்வை இவற்றுக்கு காரட் நல்லது. காரட்டில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. நிறைய ஊட்டச்சத்துகள் அடங்கிய காரட்டில் கலோரி (எரிசக்தி) குறைவாக உள்ளது. உடல் எடையைப் பராமரிப்பவர்கள் சாப்பிடக்கூடிய நல்ல காய்கறி காரட் ஆகும். காரட்டை கொண்டு சாலட், ஸ்மூத்தி, சூப் ஆகியவற்றைச் செய்து பருகலாம். வெல்லம் சேர்த்து பண்டங்கள் செய்யலாம்.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, மெக்னீசியம் ஆகியவையும், வைட்டமின்கள் ஏ மற்றும் கே ஆகியவையும் உள்ளன. பசலைக் கீரையில் எரிசக்தி (கலோரி) குறைவு. ஆனால் வயிறு நிறைந்த திருப்தியை தரக்கூடியது இது. நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலுக்குத் தரக்கூடிய பசலைக் கீரையை ஆம்லெட்டில் சேர்க்கலாம் அல்லது சாலட் செய்து சாப்பிடலாம். இது சருமத்திற்கும், கூந்தலுக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதோடு ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் உதவுகிறது.

சிறுபயிறு

பச்சைப் பயிறு என்று அழைக்கப்படும் சிறுபயிற்றை முளை கட்டி சாப்பிடலாம். கிச்சடி செய்தும் சாப்பிடலாம். பல்வேறு உணவு தயாரிப்பில் இதைப் பயன்படுத்தலாம். இதில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம் (புரோட்டீன்), ஃபோலேட், மாங்கனீசு, வைட்டமின் பி1, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, செம்பு (தாமிரம்), பொட்டாசியம், துத்தநாகம் ஆகிய சத்துகள் உள்ளன. இது சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. செரிமான மண்டலத்துக்கும் சிறுபயிறு நன்மை செய்கிறது.

பாப்கார்ன்

பாப்கார்ன், உடல் எடையைக் குறைப்பதில் உதவி செய்கிறதா? என்ற கேள்வி எழுகிறதா? ஆம், உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு பாப்கார்ன் நல்லது. ஒரு கப் பாப்கார்னில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் உடல் அழற்சியைக் குறைக்கக்கூடிய பாலிபீனால்கள் என்னும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டு (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்) உள்ளது. பாப்கார்னிலுள்ள நார்ச்சத்து கரையாதது ஆகும். இது புற்றுநோய் செல் வளர்ச்சியைத் தடுக்கிறது. செரிமான மண்டலத்தைப் பாதுகாத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிள், உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளில் உதவுகிறது. வயிற்றைத் திருப்தியாக உணரச் செய்வதோடு, இனிப்பு சாப்பிடும் தேட்டத்தையும் குறைக்கிறது. வைட்டமின்கள் சி, கே மற்றும் பொட்டாசியம் ஆகியவை ஆப்பிளில் உள்ளன. பொட்டாசியம், வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) தூண்டக்கூடியது. பீநட் பட்டருடன் ஆப்பிளை சேர்த்து பிற்பகலில் சாப்பிடலாம்.

More News >>