சவுதி அரேபியா, குவைத் செல்ல தடை அமீரக நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாட்டுக்கு திரும்ப தூதரகம் உத்தரவு
கொரோனா பரவலைத் தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத்துக்கு செல்ல இந்தியா உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் துபாய், அபுதாபி உள்பட அமீரக நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அமீரகத்திலுள்ள இந்தியத் தூதரகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத் துபாய் உட்பட வளைகுடா நாடுகளில் கடந்த வருடம் முழு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது. வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா விசா மற்றும் குறுகிய கால தொழில் விசாவில் சென்ற ஏராளமான இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் அங்குச் சிக்கினர். கொரோனா நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட பிறகே அங்கு சிக்கியவர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடிந்தது. இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த இரு நாடுகளிலும் நிபந்தனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குச் சவுதி மற்றும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை சவுதி மற்றும் குவைத்துக்கு செல்பவர்கள் துபாய் உள்பட அமீரக நாடுகளில் 14 நாள் தனிமையில் இருந்த பின்னரே அங்குச் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் சவுதி அரேபிய அரசு திடீரென தடை விதித்துள்ளதால் அங்கு தனிமையில் இருந்தவர்களால் தற்போது சவுதி மற்றும் குவைத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் அமீரக நாடுகளில் சிக்கியுள்ளனர். இவ்வாறு அமீரக நாடுகள் சிக்கியுள்ளவர்கள் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தியர்கள் எந்த நாடுகளுக்குச் செல்கிறார்களோ அந்த நாட்டின் புதிய பயண நிபந்தனைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா இந்தியர்களும் பயணம் புறப்படுவதற்கு முன் எதிர்பாராத நிகழ்வுகளைச் சந்திப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் பணத்தைக் கைவசம் வைத்திருக்க வேண்டும். சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் அமீரக நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.