பெங்களூருவில் இருந்து 23 மணி நேர பயணம்.. சென்னை வந்தார் சசிகலா..

பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. வழிநெடுகிலும் அவருக்கு அ.ம.மு.க மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெங்களூருவில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, அங்கிருந்து ஓய்வு விடுதிக்குச் சென்ற போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியைப் பயன்படுத்தியது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் கூறினர்.

மேலும், அவர் திரும்பி வரும் போது அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்தனர்.இந்நிலையில், பெங்களூருவில் இருந்து நேற்று(பிப்.8) காலை ராகுகாலத்திற்கு முன்பாக 7.20 மணிக்கு சசிகலா புறப்பட்டார். அவர் பச்சை நிறப் புடவை அணிந்திருந்தார். பெங்களூரு ஓய்வு விடுதியில் இருந்து புறப்படும் முன்பாக ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி வணங்கி விட்டு காரில் அவர் புறப்பட்டார். அவருடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் வந்தார். சசிகலா வந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. காரின் முன்சீட்டில் சசிகலா அமர்ந்திருந்தார். பெங்களூருவில் இருந்தே வழிநெடுகிலும் அவரை அ.ம.மு.க. மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். சின்னம்மா வாழ்க, தியாத்தலைவி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். அவரது கார் மீது மலர் தூவினர்.

தமிழக எல்லைக்குள் அவர் நுழைந்த போது, அவரது காரில் அதிமுக கொடியை அகற்ற வேண்டுமென்று போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். அதை சசிகலாவின் வழக்கறிஞர்கள் வாங்கிக் கொண்டனர். ஜுஜுவாடி பகுதியில் காரை நிறுத்திய சசிகலா, காரில் இருந்து இறங்கி இன்னொரு காரில் ஏறிக் கொண்டார். அது அ.திமு.கவைச் சேர்ந்த சூளகிரி ஒன்றியச் செயலாளர் சம்பங்கி என்பவரின் காராகும். அதில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.அதன்பிறகு, கிருஷ்ணகிரி, வேலூர், ஸ்ரீபெரும்புதூர் என்று ஒவ்வொரு ஊரிலும் சசிகலா காரை நிறுத்தி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பல ஊர்களில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். இன்று(பிப்.9) அதிகாலை 4.30 மணியளவில் சசிகலாவின் கார் சென்னை ராமாவரத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு அவர் காரை நிறுத்தி விட்டு, எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு சென்றார். அவருடன் டி.டி.வி.தினகரனும் சென்றார்.

அவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலையை அணிவித்து வணங்கினர். அதன்பின்னர், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டுக்கு வந்தனர். வழிநெடுகிலும் விடிய, விடிய தொண்டர்கள் கூட்டமாக காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா காருடன் சுமார் 20 கார்களும் பின்தொடர்ந்து வந்தன. காலை 6.30 மணியளவில் சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். பெங்களூருவில் இருந்து சுமார் 23 மணி நேரம் பயணித்து சசிகலா வந்து சேர்ந்தார். இன்று ஓய்வெடுக்கும் சசிகலா, அடுத்து என்ன செய்வாரோ என்ற பரபரப்பு அதிமுகவினரிடம் மட்டுமல்ல, மக்களிடமும் எழுந்துள்ளது.

More News >>