கேரளாவில் மேலும் 156 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நிபந்தனைகளை கடுமையாக்க முடிவு
கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட மேலும் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வரும் போதும் 10 மற்றும் 12ல் படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும் வகுப்புகளை நிறுத்த முடியாது என்று கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளிகளில் நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது.
தினமும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் நோயாளிகளில் பாதிப் பேருக்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர். இதனால் நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மார்ச் 17 முதல் 30ம் தேதி வரை இந்த வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டதற்கும், தேர்வு நடத்தத் தீர்மானித்ததற்கும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் பள்ளிகளைத் திறக்கும் முடிவிலிருந்து கேரள அரசு பின்வாங்கவில்லை. இதன்படி கடந்த ஜனவரி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று முன் தினம் மலப்புரம் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 268 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த 2 பள்ளிகளும் உடனடியாக மூடப்பட்டன. நேற்று இதில் ஒரு பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 156 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே வேகமாக கொரோனா பரவி வருவதைத் தொடர்ந்து பள்ளிகளை மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. ஆனால் பள்ளிகள் மூடப்பட மாட்டாது என்று கேரள கல்வித்துறை செயலாளர் ஜீவன் பாபு அறிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் நிபந்தனைகளை மேலும் கடுமையாக்கக் கேரள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.