சசிகலாவுக்கு கார் கொடுத்து ஒரே நாளில் பிரபலமான அதிமுக நிர்வாகி..

பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் போது, அவரது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து, அவருக்கு அதிமுக கொடி கட்டிய காரை வழங்கிய அதிமுக நிர்வாகி சம்பங்கியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். பெங்களூருவில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, அங்கிருந்து ஓய்வு விடுதிக்குச் சென்ற போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியைப் பயன்படுத்தியது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் கூறினர்.

மேலும், அவர் சென்னைக்குத் திரும்பி வரும் போது அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்தனர்.இந்நிலையில், பெங்களூருவில் இருந்து நேற்று(பிப்.8) காலை ராகுகாலத்திற்கு முன்பாக 7.20 மணிக்கு சசிகலா புறப்பட்டார். அவருடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் வந்தார். சசிகலா வந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. காரின் முன்சீட்டில் சசிகலா அமர்ந்திருந்தார். தமிழக எல்லைக்குள் அவர் நுழைந்த போது, அவரது வாகனத்தில் அதிமுக கொடியை அகற்ற வேண்டுமென்று போலீசார் நோட்டீஸ் கொடுத்தனர். அதை சசிகலாவின் வழக்கறிஞர்கள் வாங்கிக் கொண்டனர்.

ஜுஜுவாடி பகுதியில் காரை நிறுத்திய சசிகலா, காரில் இருந்து இறங்கி இன்னொரு காரில் ஏறிக் கொண்டார். அது அ.திமு.கவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவரின் காராகும். அதில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா அந்த காரில் பயணிக்கத் தொடங்கினார்.சசிகலா வருவது எஸ்.ஆர்.சம்பங்கியின் கார் என்பது சில நிமிடங்களில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால் ஒரே நாளில் சம்பங்கி பிரபலமாகி விட்டார். இதைத் தொடர்ந்து, அவரை அதிமுகவில் இருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், சசிகலாவை வரவேற்கச் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திரரெட்டி, பிரசாந்த்குமார், ஏ.வி.நாகராஜ், ஆனந்த் ஆகியோரையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கே.பி.முனுசாமி மீது அதிருப்தி கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதே போல், மந்திரிகள் மீதும், மாவட்டச் செயலாளர்கள் மீதும் அதிருப்தி அடைந்தவர்கள் சசிகலாவின் பக்கம் செல்வார்கள் என்று அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More News >>