இணைந்து செயல்படுவோம்.. மோடியுடன் ஜோ பிடன் பேச்சு..
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். கடந்த ஜன.6ம் தேதி, நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜன.20ம் தேதியன்று, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜோ பிடன் நேற்று(பிப்.8) தொலைபேசியில் பேசினார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜோ பிடன் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு, பொருளாதார மேம்பாடு, சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
மேலும், இருநாடுகளும் தொடர்ந்து இந்த விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டுமென்று பிடன் கேட்டுக் கொண்டார். மேலும், உலகம் முழுவதும் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும், ஜனநாயக மாண்புகளைப் பின்பற்ற வேண்டுமென்ற தனது விருப்பத்தையும் ஜோ பிடன் தெரிவித்தார். மேலும், மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும் இருவரும் தீர்மானித்தனர்.இவ்வாறு வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.