சசிகலா உடல்நலம் விசாரித்த அதிமுக புள்ளிகள் யார் யார்? டி.டி.வி.தினகரனுடன் ரஜினி பேச்சு..

சசிகலாவின் உடல் நிலை குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து சசிகலா நேற்று காலை புறப்பட்டு இன்று காலையில் வந்து சேர்ந்தார். அவருடன் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் வந்தார். சென்னை தி.நகரில் கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்திற்கு அவர்கள் காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தனர். அப்போது டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: அதிமுக நிர்வாகிகள் சிலரை நீக்கியிருப்பதாக செய்தி வந்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது.

உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன்தான் வருவார்கள். சசிகலா வரும் போது சில இடங்களில் தடைகளை ஏற்படுத்தினார்கள். அதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம். சசிகலா வந்த காரில் அதிமுக கொடியை கழற்றச் சொன்னதால் காரை மாற்றவில்லை. முதலில் வந்த காரில் ஏசி ரிப்பேராகி விட்டது. அதனால்தான், அ.தி.மு.க. நிர்வாகி காரில் சசிகலா வந்தார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் சசிகலா கூறுகிறார். புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். ஜெயலலிதா நினைவிடத்தை திறந்ததற்கு பிறகு சசிகலா அங்கு செல்வார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் செல்வது குறித்து அவர்தான் முடிவு செய்வார். எங்களை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி தி.மு.க.தான். நண்பர் ரஜினிகாந்த் என்னிடம் தொடர்பு கொண்டு சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர் பொதுவானவர் என்பதால் அதை வெளியே சொல்வதில் தவறில்லை. அதே சமயம், அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவிடம் உடல்நலம் விசாரித்திருக்கலாம். அவர்களை வெளியே சொன்னால் அங்கு அவர்களுக்கு பிரச்னை வரும். அதனால் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>