அமெரிக்காவில் விமான விபத்து - உடைந்தது ஜன்னல் பிரிந்தது உயிர்!
செவ்வாயன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டாலஸூக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பழுதடைந்தது. அவசரமாக பிலடெல்பியா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விமானத்தில் பயணித்த மற்றவர்கள் தப்பித்தனர்.
சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் 737 ரக விமானம் செவ்வாய் காலை 10:43 மணிக்கு லாகார்டியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானத்தில் 144 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்தனர். மூன்று மணி நேரம் பயணப்பட வேண்டிய இந்த விமானம், புறப்பட்ட 20 நிமிடங்களில் தரையிலிருந்து 32,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தத்தை பயணியர் கேட்டனர். விமானம் மிகவும் குலுங்கியது.
விமானத்தின் இடது பக்க இறக்கையின் கீழ் உள்ள எஞ்ஜின் உடைந்து, அதன் ஒரு பாகம் விமானத்தின் ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே விழுந்துள்ளது. விமானி, தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். உடைந்த ஜன்னலின் வழியாக, காற்று உள்ளே புக ஆரம்பித்ததால், விமானம் வெகு வேகமாக கீழே இறங்கியது. ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அது 10,000 அடி உயரத்தை அடைந்து விட்டது.
உடைந்த ஜன்னலின் அருகே உட்கார்ந்திருந்த நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ஜெனிஃபர் ரியோர்டன் என்ற 43 வயது பெண் பயணி, விமானத்திற்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார். ஏனைய பயணிகள் அதிக முயற்சி எடுத்து, அவரை உள்ளே இழுத்துள்ளனர். விமானத்தில் பயணித்த நர்ஸ் ஒருவர் அவருக்கு முதலுதவி அளித்துள்ளார். விமானம் காலை 11:20 மணிக்கு பத்திரமாக பிலடெல்பியா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விபத்தில் ஜெனிஃபர் ரியோர்டன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பழுதடைந்த விமான எஞ்ஜினின் ஒரு பகுதி விமானம் இறங்கிய இடத்திலிருந்து 70 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com