இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடத் தொடங்கிய இந்தியா, இங்கிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாலோ ஆன் பெற்ற போதிலும் இந்தியாவை பேட்டிங் செய்ய பணிக்காமல் இங்கிலாந்து மீண்டும் இரண்டாவது தொடங்கியது. ஆனால் இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து 178 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதையடுத்து 420 என்ற கடினமான இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. நேற்று மாலை ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 12 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். நேற்று ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இந்தியாவின் மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடி வெற்றியை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். 192 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதையடுத்து இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் கேப்டன் கோஹ்லி 72 ரன்களும், சுப்மான் கில் 50 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், பெஸ் மற்றும் ஸ்டடோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை தொடர்ந்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.