தங்கச்சியும் ஆரம்பிக்கிறார் தனிக்கட்சி...
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் போட்டியிட்ட போது அவரது கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அவரின் சகோதரியான ஷர்மிளா. தனது சகோதரர் ஆட்சியைப் பிடிக்க வேண்டி பாத யாத்திரையை நடத்தி மக்கள் மத்தியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரபலம் அடைய முக்கிய காரணமாக இருந்தவர். தனது எளிமையான நடவடிக்கைகள் மூலம் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர் செய்த பிரச்சாரம் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடிக்க ஒரு கருவியாக இருந்தது.
இந்நிலையில் தனது சகோதரர் ஆந்திர மாநில முதல்வராகி ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் அவரது கட்சி ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தனது தந்தை ராஜசேகர ரெட்டி தாய் விஜயலட்சுமியின் 50 ஆம் ஆண்டு திருமண நாளான இன்று ஐதராபாத் லோட்டஸ் பாண்டில் தனது இல்லத்தில் நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஷர்மிளா ஆலோசனை நடத்தியிருக்கிறார் . அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா ஒருங்கிணைந்த ஆந்திராவில் எனது தந்தையின் ராஜன்ன ராஜ்ஜியம் இருந்தது. ஆனால் ஆந்திராவில்தற்போது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியின் மூலம் ராஜன்ன ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் அந்த நிலை இல்லை எனவே தெலுங்கானா மாநிலத்திலும் என் தந்தையின் ராஜன்ன ராஜ்யம் அமையவேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் தெலங்கானா மாநிலத்திற்கென புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார். ஷர்மிளாவின் இந்த அறிவிப்பு தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்மிளாவின் லோட்டஸ் பாண்ட் இல்லத்தில் திரண்ட கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.