தேனியில் போட்டி... டிடிவி தினகரன் பிளான் என்ன?!

தேனியில் ஒரு தொகுதியிலும், ஆர்.கே.நகர் தொகுதியிலும் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தார். தற்போது, சென்னையில் தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் சசிகலா தங்கியுள்ளார்.

இதற்கிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் மற்றும் தேனி மாவட்டத்தின் ஒரு தொகுதியில் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன் என்றார். டிடிவி தினகரனின் இந்த பேட்டி அதிமுகவினர் மற்றும் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், தேனி மாவட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டையாக திகழ்கிறது.

ஓ.பன்னீர் செல்வம் மாவட்டமான தேனியில் ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், கம்பம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது உள்ளார். கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க எஸ்.டி.கே ஜக்கையன் உள்ளார். பெரியகுளம் (தனி) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க சரவணனனும், ஆண்டிபட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தி.மு.கவின் மகாராஜனும் உள்ளனர். ஆக, மாவட்டத்தின் இரண்டு தொகுதிகள் அ.தி.மு.கவின் வசமும், இரண்டு தொகுதிகள் தி.மு.கவின் வசமும் உள்ளன.

எனவே, அதிமுக, திமுக போட்டிபோடும் தேனியில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், டிடிவி தினகரன் தேனியில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், ஓபிஎஸ் தனது இளைய மகனை டிடிவிக்கு எதிராக களமிறக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைபோல், டிடிவி தினகரனுக்கு எதிராக தேனியில் தங்க தமிழ்ச்செல்வனை திமுக களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் பெரிதும் எதிர்பார்பு நிடைந்த மாவட்டமாக கருதப்படுகிறது.

More News >>