சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் மீது வழக்கு
கடந்த மார்ச் மாதம் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தொடர்பான சர்ச்சை ஒன்றில் சிக்கியது ஃபேஸ்புக். அப்பிரச்னையில் தன் பயனாளர்களில் 8.7 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.
2015-ம் ஆண்டு இல்லினாய்ஸ் ஃபேஸ்புக் பயனாளர்கள் தொடர்ந்த வழக்கு ஒன்றில் திங்கள் அன்று, ஃபேஸ்புக் மீதான வழக்குக்கு போதிய காரணங்கள் இருப்பதாக சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தின் நீதிபதி ஜேம்ஸ் டோனடோ தெரிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக், நண்பர்களை இணைப்பதற்கான, டேக் சஜசன்ஸ் என்ற வசதியை வழங்கி வருகிறது. அதன் மூலம் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படத்தைக் கொண்டு, பயனாளரின் நண்பர்களை அடையாளம் கண்டு, அவர்களை 'டேக்' செய்வதற்கு ஃபேஸ்புக் பரிந்துரை செய்யும்.
இவ்வசதியில் பயனாளர்களின் அனுமதியை பெறாமல் அவர்களது முக அடையாளம் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை ஃபேஸ்புக் சேகரிப்பதாகவும், இது தனியுரிமை குறித்த இல்லினாய்ஸ் சட்டத்தை மீறும் செயல் என்றும் வழக்கு தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர், "இந்த வழக்கை ஃபேஸ்புக் நிறுவனம் சரியான விதத்தில் எதிர்கொள்ளும்" என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com