தேர்தல் வியூகம் தமிழ்நாட்டை அடுத்து கேரளாவுக்கும் செல்ல பிரதமர் மோடி திட்டம்
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கேரளாவுக்கும் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். வரும் 14ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அன்றே அவர் கேரளா செல்லவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த 5 மாநிலங்களிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பிரசார வியூகம் ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நடைபெற உள்ள இந்த 5 மாநிலங்களில் அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இல்லை. இதனால் இந்த 4 மாநிலங்களிலும் தீவிர கவனம் செலுத்த பாஜக தீர்மானித்துள்ளது. பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் இந்த மாநிலங்களில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பாஜக தேசிய தலைவர் நட்டா ஏற்கனவே இந்த மாநிலங்களில் ஒரு முறை சுற்றுப்பயணத்தை முடித்து விட்டார். இந்நிலையில் பிரதமர் மோடியும் தேர்தல் நடைபெற உள்ள இந்த மாநிலங்களில் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளார். இதன்படி வரும் 14ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
சென்னை நிகழ்ச்சியை முடித்த பின்னர் அன்றே அவர் டெல்லி திரும்ப முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது மோடியின் பயணத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் கேரள மாநிலம் கொச்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொச்சியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, துறைமுகம், கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்பட பொதுத்துறை நிறுவனங்களில் நடத்தப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தையும் அவர் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இறுதி அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.