தமிழக முதல்வரின் நிகழ்ச்சிக்காக கல்லூரி முதல்வர் செய்த ஏற்பாடு : மாணவிகள் கோபம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு போதியளவு கூட்டம் கூடாததால் அங்கு உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் மாணவிகளை கல்லூரிக்கு வெளியே வரிசையாக நிற்க வைத்த அவலம் அரங்கேறி இருக்கிறது. இது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் வருகைக்காக பொதுமக்கள் கூட்டம் போதிய அளவு கூடவில்லை. இதன் காரணமாக வாணியம்பாடி அருகே சின்ன கல்லு பள்ளி என்ற கிராமத்தில் உள்ள மருதர் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் அனைவரும் முதல்வரை வரவேற்க ரோட்டில் நிற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கட்டளையிட்டது.

இதைத்தொடர்ந்து வகுப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு மாணவிகள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டனர் . வெளியே வந்த மாணவிகள் ரோட்டின் இரு மருங்கிலும் வரிசையாக நின்று முதல்வரை வரவேற்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டனர். இதற்கு ஏராளமான மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் மிரட்டும் தொனியில் எச்சரித்ததால் வேறு வழியின்றி கடும் வெயிலில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு மாணவிகள் கால்கடுக்க நின்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம் மாண வியரின் பெற்றோர்களையும் பொது மக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில் அதிமுகவினர் திட்டமிட்டே கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி இவ்வாறு செய்து உள்ளனர் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றனர் . இன்னும் சிலரோ கல்லூரி நிர்வாகத்திற்கு ஏதோ காரியம் ஆகவேண்டும் என்பதற்காக மாணவிகளை இப்படி நிற்க வைத்துள்ளனர் என்று குமுறினர்.

More News >>