குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவது எப்போது? மத்திய அரசு தகவல்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை கடந்த அக்டோபர் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது.இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், சிறுபான்மையினரும் இந்த சட்டத்தை எதிர்த்து பல மாதங்கள் போராடினர்.

மேலும், எதிர்க்கட்சிகள் பலவும் இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஐ.நா. மனித உரிமை கமிஷனர் மிச்சேல் பேச்லெட்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. திக்விஜயசிங், ராஜ்யசபாவில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில் அவர், சிஏஏ சட்டம் அமலுக்கு வந்து விட்டதா? அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு விட்டனவா? அவை எப்போது முதல் அமலுக்கு வரும்? இல்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன? என்றுகேட்டிருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:சி.ஏ.ஏ சட்டம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டு விட்டது. சட்டத்தின் கீழ் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை முடிவானதும் 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும். தற்போது விதிமுறைகளை வகுக்க நாடாளுமன்ற கமிட்டி வரும் ஜூலை 9ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருக்கிறது.இவ்வாறு கூறியுள்ளார்.

More News >>