ஜெகனுடன் மோதல்? ஒய்எஸ்ஆர் மகள் சர்மிளா தொடங்கும் புதிய கட்சி..
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்குகிறார்.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். அவரது சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா நேற்று(பிப்.9), தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு வந்தார். அங்கு நலகொண்டா மாவட்டத்தில் இருக்கும், தனது தந்தை ராஜசேகரரெட்டியின் ஆதரவாளர்களை அழைத்துப் பேசினார்.
அதன்பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினா். அப்போது அவர் கூறுகையில், தெலங்கானாவில் ராஜன்னா ராஜ்ஜியம்(ராஜசேகரரெட்டி ஆட்சி) அமைப்போம். தற்போது ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே, மற்ற மாவட்ட மக்களையும், எனது தந்தையின் ஆதரவாளர்களையும் அழைத்துப் பேசி விட்டு புதிய கட்சியைத் தொடங்குவேன் என்று கூறினார்.
இதையடுத்து, ஜெகன்மோகனும், அவரது சகோதரி சர்மிளாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சர்மிளா ஐதராபாத்துக்கு வருகிறார் என்று ஒரு தகவலும் உலா வந்தது. ஆனால், அதை சர்மிளா மறுத்துள்ளார். தெலங்கானாவிலும் தனது தந்தைக்கு ஆதரவாளர்கள் உள்ளதால் கட்சியை விரிவுபடுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரியும் முன்பாக ஒருங்கிணைந்த ஆந்திராவில் முதலமைச்சராகக் காங்கிரசின் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பதவி வகித்தார். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரான இவர் அந்த மக்களவை தொகுதியில் 1989ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி அசைக்க முடியாத தலைவராக இருந்தார். திடீரென அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தார்.
அதன்பின்னர், அவரது மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் போராடி 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சரானார். அதே சமயம், தெலங்கானா பிரிந்த பிறகு அந்த மாநிலத்தில் இவர் அங்குக் கட்சியை வளர்க்க முயற்சிக்கவே இல்லை. அதனால், அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போனது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்களும் தெலங்கானா ராஷ்டிட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சிக்குத் தாவியதால், தெலுங்கு தேசமும் இல்லாமல் போனது. இந்த நிலையில்தான், தெலங்கானா மாநிலத்திற்குள் சர்மிளா நுழைந்துள்ளார்.