அதிகாலையில் ஹோட்டலுக்கு வந்த ராயல் கெஸ்ட்: குஜராத்தில் அதிர்ச்சி
கடந்த திங்களன்று அதிகாலையில் குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரிலுள்ள ஹோட்டலுக்குள் சிங்கம் ஒன்று நுழைந்த கண்காணிப்பு காமிரா காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.குஜராத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயத்திற்கு அருகில் உள்ள நகரம் ஜூனாகத். கிர் சரணாலயத்தில் மட்டுமே தற்போது ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. ஜூனாகத் நகரின் பரபரப்பான பகுதியில் ரயில் நிலையத்திற்கு நேர் எதிரில் அமைந்துள்ளது சரோவர் போர்டிகோ என்று ஹோட்டல்.
கடந்த திங்கள்கிழமை (08.02.2021)அதிகாலை 5 மணியளவில் இந்த ஹோட்டலின் நுழைவு வாயில் அருகே வந்த சிங்கம் ஒன்று, சிறிய தடுப்பைத் தாண்டி குதித்து உள்ளே வருவதும் பின்னர் ஹோட்டலின் வாகனம் நிறுத்தும் பார்க்கிங் பகுதியில் சுற்றிவிட்டு மீண்டும் வந்த பாதையிலேயே தடுப்பை தாண்டி குதித்து சாலைக்குச் செல்வதும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
சிங்கம் உள்ளேயும் வெளியேயும் தாண்டி குதிக்கும் நேரத்தில் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளன. இந்திய வன அதிகாரியான சுசாந்தா நந்தா, இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, ஏதாவது எதிர்மறை நிகழ்வு நடப்பதற்கு முன்பு இவற்றை புதிய இடத்திற்கு மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராம் ட்ரீஹக்கர் என்பவர் ட்விட்டரில், "குஜராத்தில் 50 சதவீதம் சிங்கங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே வசிப்பதாக வாசித்துள்ளேன். இது மனிதர்கள் மற்றும் சிங்கங்களின் வாழ்வுக்கு ஆபத்தாக முடியும். அவை வேறிடங்களுக்கு மாற்றப்படவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.சோனல் ராம்நத்கர் என்பவர், "பூனைகள் இடம் சார்ந்து வசிப்பவை. நீங்கள் அவற்றின் இருப்பிடத்தை மாற்றினால் அவை தங்கள் பழைய வீடுகளுக்குத் திரும்பும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லையில் கட்டடங்கள் கட்டுவதைக் குற்றம் என்று அறிவிக்கவேண்டும்" என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.ஜூனாகத் நகரத்தில் சிங்கங்கள் உலாவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது. 2019ம் ஆண்டில் ஏழு சிங்கங்கள் கூட்டமாக ஜூனாகத் தெருக்களில் உலாவின.