யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்கிறது இதைத்தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அவர் தமது மனுவில் சமீப ஆய்வுகளின் படி யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தந்தம், முடி போன்றவற்றுக்காக யானைகளைக் கொடூரமான முறையில் கொல்லும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இது போன்ற நிகழ்வுகளால் விரைவில் யானை இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே யானைகள் வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.இதே போலத் தமிழகத்திலுள்ள காடுகளில் உள்ள விலங்குகளைக் கொன்று உடலைக் கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நித்திய சௌமியா என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவின் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "யானைகள் தந்தங்களுக்காகக் கொல்லப்படுவது மற்றும் தந்தங்களின் விற்பனை என்பது சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இது மிகப்பெரும் மாபியாவாகவே உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "யானை மிகவும் முக்கியமான உயிரினம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுபவை. . இந்த விவகாரத்தில் பலருக்குத் தொடர்பு உள்ள நிலையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களிலும் உள்ளனர். ஆகவே தமிழகத்தைத் தாண்டி இது குறித்த விசாரணை அவசியமாகிறது. ஆகவே தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

More News >>